சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

Published on Author தண்பொழிலன்

இலங்கைப் பத்திரிகைச் சூழலைப் பொறுத்தவரை, சரிநிகர் மிக முக்கியமான மாற்று இதழ். “சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் வரிகளிலிருந்து தனக்கான பெயரைச் சூடியிருந்தது இவ்விதழ். 2001 வரை பல்வேறு செய்திகளைச் சுமந்துவந்த சரிநிகர், இலங்கையின் போர்க்கால சூழலில், மாற்றுக்கருத்துக்களுக்கு மாத்திரமன்றி, சிறுகதை, கவிதை முதலியவற்றிலும் பல பரிசோதனைகள் இடம்பெற இடமளித்து, ஈழத்து இலக்கியத்தையும் செழுமைப்படுத்தியது.

sarinikar

1990 யூன் மாதம் மாத இதழாக வெளிவர ஆரம்பித்த இது, பின்னர் வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. சரிநிகரின் ஆறாவது இதழைத் தான் இந்தக் காலக்கண்ணாடியில் பார்க்கப்போகிறோம்.

அது , இற்றைக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பாக 1991 ஜனவரி/பெப்ரவரி மாத இதழாக வெளிவந்தது. பன்னிரண்டு பக்கங்களுடன் வெளியான அந்த இதழ், “தீர்வை முன்வையுங்கள்” எனும் தலைப்புச்செய்தியைக் கொண்டிருந்தது. இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ஒருவார போர்நிறுத்தம் மேற்கொண்டுள்ள காலப்பகுதியை விவரிக்கிறது அச்செய்தி. “தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிலேயே பிரச்சினைக்கான தீர்வை ஆரம்பமாக முடியும்” என்று வலியுறுத்துகிறது அப்பத்தி.

“கொழும்பு அகதிகளின் அவலம், யார் தான் பொறுப்பு?”, “சிங்களக்குடியேற்றங்களின் தன்மையும் விளைவுகளும்”, “தென்னிலங்கை நாடகப் போக்கு”, “முஸ்லீம் பிரச்சினை: தீர்வு என்ன?” முதலான முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளும் மற்றும் சுவையான பல கட்டுரைகளும் இந்த இதழில் கிடைக்கின்றன. திருத்தமான தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகளும், கவிதைகளும் கூட இந்த இதழில் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன.

இவ்விதழைப் படிக்க: இங்கு அழுத்துங்கள்.
சரிநிகர் இதழ்களைப் படிக்க:இங்கு அழுத்துங்கள்