அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

Published on Author தண்பொழிலன்

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 1981 யூன் 1. அன்று நள்ளிரவிலேயே தமிழரின் கல்விச்சொத்தான யாழ்ப்பாண நூலகம், திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அதன் விளைவையொத்த எதிர்பாராத இன்னொரு சம்பவத்தை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சந்தித்திருக்கிறது பிரேசில். அந்நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்திருந்த தேசிய  அருங்காட்சியகம், கடந்த 2018 செப்டம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்தொழிந்து போயிருக்கிறது.

தீயால் உண்ணப்படும் பிரேசில் தேசிய அரும்பொருளகம், ரியோடி ஜெனிரோ

 

ரியோ டி ஜெனிரோவின் அருங்காட்சியகம், அங்கிருந்த மிகப்பழைய கட்டிடங்களுள் ஒன்று. கடந்த 1892இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட இக்கட்டிடம், அதற்கு முன்னர், பிரேசிலின் அரச குடும்பம் வசித்து வந்த மாளிகையாக இருந்து வந்தது. கடந்த யூன் மாதம் தான் அது தன் இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியிருந்தது. கடந்த செப்டம்பர் 02ஆம் திகதி மாலை அருங்காட்சியகம் மூடப்பட்டு சற்று நேரத்தில் திடீரென அருங்காட்சியகத்துக்குள் தீ கொழுந்துவிட்டெரிவதை அவதானித்திருக்கிறார்கள். உள்ளூர் நேரம் இரவு ஏழரை மணியளவில் தீயணைப்புப்படையினர் வந்து விட்டாலும், போதிய உபகரணங்கள், நீர்வசதிகள் இல்லாத நிலையில்  தீயணைப்புப் பணிகள் தாமதமாகவே ஆரம்பமாகின. ஒன்பது மணியளவில் தீ கட்டுப்பாடின்றி அருங்காட்சியகம் முழுவதும் பரந்தது. கட்டிடத்தின் இருமாடிகள் முழுமையாகக் கருகிக்கொண்டிருந்தன. பத்து மணியளவில் கூரை தகர்ந்து விழ, அருங்காட்சியகம் தரைமட்டமானது.

கொழுந்து விட்டெரியும் தீ

இந்தத் தீவிபத்தில் ஓரிரு கலைப்பொருட்களை தீயணைப்புப் படையினரும், அருங்காட்சியகப் பணியாளர்களும் காப்பாற்றியிருந்தனர். ஆனால், அங்கிருந்த 95 சதவீதமான அரும்பொருட்களை தீயுண்டு விட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் இருபது மில்லியன் பொருட்கள் அழிந்தொழிந்து போயுள்ளன என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவற்றில் பிரேசிலின் தேசியச்சொத்துக்கள் பலவும் அடங்கும். சுமார் பதினோராயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த, “லூசியா” எனும் பெண்ணின் எலும்பு எச்சங்கள், எண்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “மாக்சாகாலியோசோரஸ்” எனும் தொன்மாவின் உயிர்ச்சுவடு.  கி.மு முதலாம் ஆயிரமாம் ஆண்டைச் சேர்ந்த  கிரேக்க, உரோமானிய, எகிப்திய சேகரிப்புக்கள், என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் மிகப்பிரதானமான இழப்பு, மொழியியல் சார்ந்தது. 1958இலிருந்து பிரேசிலின் சுதேச மொழிகளின் ஒலிப்பதிவுகள், மறைந்த மொழிகளின் சடங்குப்பதிவுகள் என்பன இந்த அருங்காட்சியகத்தின் மொழியியல் காட்சியகத்தில் சேமிக்கப்பட்டிருந்தன. பிரேசிலிய எழுத்தாளரும் மாந்தவியலாளருமான கேர்ல் நிமுவேடஞ்ஜூவின் அரிய பல ஒலிப்பதிவுகள், புகைப்படச்சேகரிப்புகள்,  ஆய்வுநூல்கள் முதலிய அனைத்தும் அழிந்தொழிந்து போயுள்ளன. இவை எதுவுமே இனி இல்லை. பிரேசிலின் மறைந்த மொழிகள், மறைந்த இனங்களின் இறுதி எச்சங்களும் அடியோடு மறைந்துபோய் விட்டன.

11,000 ஆண்டுகள் பழைமையான லூசியாவின் எச்சம்

இந்தத் தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரேசிலின் பண்பாட்டு அமைச்சர், அது மின்னொழுக்கினாலோ, அலங்கார வான் விளக்கொன்று தவறுதலாக விழுந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், பிரேசிலின் அறிஞர்களும் பொதுமக்களும் பெரும் சீற்றம் கொண்டிருக்கிறார்கள். இந்த விபத்து முழுக்க முழுக்க அரசின் கவனயீனத்தால் இடம்பெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். அண்மைக்காலமாக பிரேசிலை ஆளும் எந்தவொரு அரசாங்கமும் அருங்காட்சியகத்தை பேணுவதில் போதிய கவனம் எடுத்திருக்கவில்லை. அங்கு போதுமான தீயணைப்புக்கருவிகள் எதுவும் நிறுவப்படவும் இல்லை. தீயணைக்க வந்த படையினர் கூட அருகில் தண்ணீர் கிடைக்காமல் சற்று தூரமாக உள்ள ஏரிக்குச் சென்றே நீர் நிரப்பி வந்து தீயணைக்க வேண்டி நேரிட்டது,

 

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அருங்காட்சியக மேற்பார்வைப்பணிக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் சுமார் ஐந்து இலட்சம் பிரேசிலிய ரியால் பெறுமதியான நிதியை அரசு வழங்கவில்லை. சுத்தப்பணி மற்றும் காவலர் பணி செய்வோருக்கான கொடுப்பனவுக்கு நிதி இல்லாமையால், 2015இல் சிலநாட்கள் அருங்காட்சியகத்தை மூடவேண்டி ஏற்பட்டது. மரத்தாலான டைனோசர் தாங்கியொன்று செல்லரித்து சிதைந்து விழுந்தபோது, பொதுமக்களின் அன்பளிப்பிலேயே திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேல், 2018இலிருந்து அருங்காட்சியகத்துக்கான மேற்பார்வை நிதியை 90 சதவீதத்தால் குறைத்திருந்தது பிரேசிலிய அரசு.

சாம்பலாகிவிட்ட Maxakalisaurus தொன்மா எச்சம்

 

எல்லாவற்றையும் விட மிகுந்த சோகமான விடயம், இந்த அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எதுவுமே  மின்னியல் ஆவணப்படுத்தல் செய்யப்படவில்லை என்பதே. சேகரிப்பில் இருந்த அரும்பொருட்களை முப்பரிமாண மீள்கட்டமைப்புச் செய்வதற்காக சுற்றுலாப்பயணிகளிடம் புகைப்படங்கள், காணொளிகளைக் கோரியிருக்கிறார்கள். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் ஏதும் ஆவணங்களின் ஒளிப்பிரதிகள், வருடல் நகல்கள் இருந்தால் அனுப்பி வைக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  ஆவணப்படுத்தலுக்கான செயற்றிட்டங்கள் எதையும் அமுல் படுத்துவதில் பிரேசிலிய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டும் பிரேசிலிய அறிஞர்கள்,  ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான்  அரும்பொருட்களை எண்ணிமப்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமானதாகவும், அது நிறைவேறும் முன்பே அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விட்டதாகவும், கண்ணில் நீர் தளும்பக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த அனர்த்தத்தை அடுத்த செவ்வியொன்றில் “ஏன் இவை இதுவரை எண்ணிமப்படுத்தப்படவில்லை? ஒரு ஆவணமாவது தொடரறா நிலையில் கிடைக்கிறதா?” என்ற கேள்விக்கு பேராசிரியர் சொய்சா லிமா சொல்லும் பதிலில் ஆவேசம் தொனிக்கிறது. “இல்லை, ஒன்றுமே இல்லை. பார்த்தீர்களென்றால் எங்களிடம் எப்போதுமே போதுமான பணம் இருந்ததில்லை.  இதனால் தான் நான் கோபமாக இருக்கிறேன்.  பொருளாதார தொழில்நுட்ப மேட்டுக்குடிகள் மீது, அரசியல்வாதிகள் மீது, கொள்கைவகுப்பாளர்கள் மீது, எல்லார் மீதும்! இவர்கள் எவருமே  பிரேசிலின் மரபுரிமை, பண்பாடு, கல்வி பற்றி கவலைப்பட்டதே இல்லை.”

 

“இது இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது. ஆண்டுக்காண்டு இங்கிருந்த அரும்பொருட்களை புகைப்படமாகவோ, வருடல்களாகவோ, ஒலிக்கோப்புகளாகவோ பின்சேமித்து வைத்திருக்க முடியும். இதில் ஏற்பட்ட தோல்வியானது தொழில்நுட்பத்தின் குறுகிய எல்லை பற்றிய கசப்பான உண்மையைப் பேசப்போகிறது.  கல்விசார் சமூகம் இதுவரை ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை கொஞ்சம் கூட உணரவில்லை; பிரேசிலில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே” என்று ஆற்றாமையுடன் சொல்கிறது “வயர்ட்”  ஊடகம். 

 

எது எப்படியோ, அந்நாட்டு மக்களைப் போல  பிரேசில் அரசையே நாமும் குற்றம் சாட்டுவதால், இழக்கப்பட்ட எதுவும் மீளப்போவதில்லை. அந்நாட்டு அரசும் அந்த இழப்பின் பெறுமதியை  உணர்ந்து வருந்துகிறது.  ஆனால் பிரேசிலிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்வதற்கான மிகப்பெரும் பாடம் ஒன்று இருக்கிறது. இந்த எண்ணிம உலகில் முன்னணி நாடுகளுள் ஒன்றான பிரேசிலாலேயே தன் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வைக்கமுடியவில்லை என்பது ஏனைய எல்லா நாடுகளுக்குமே எச்சரிக்கையும் படிப்பினையும் தான்.

 

இந்த விபத்தில் பதினோராயிரம் ஆண்டுகள் பழைமையான லூசியாவையும், எண்பது மில்லியன் ஆண்டுகள் பழைமையான தொன்மாவையும் இழந்தது பிரேசில் மட்டுமில்லை; முழு மனுக்குலமுமே! அரும்பொருட்கள் ஒரு நாட்டின் பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காப்பதற்கு மாத்திரம் அல்ல; அது முழு மனித நாகரிகத்துக்குமே பெருஞ்சொத்துக்கள் தான். எத்தனைக்கெத்தனை சீக்கிரமாக ஆவணப்படுத்துகிறோமோ, அத்தனைக்கத்தனை நல்லது – எல்லோருக்குமே –  எல்லாவற்றுக்குமே!

 

எந்த நாடு என்றால் தான் என்ன, வரலாற்றிலும் தொல்லியல் கலைச்செல்வங்கள் பேணப்படுவதிலும் ஆர்வம் காட்டும் எவருக்கும் பிரேசில் அருங்காட்சியக விபத்து, ஒருசொட்டுக் கண்ணீரை விட வைத்திருக்கும்.

பிரேசிலின் புகழ்பெற்ற மானுடவியலாளரான விவைரஸ் காஸ்ட்ரோ, இத்துயர் தொடர்பில் தெரிவித்த  கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.  “உங்கள் எல்லோரையும் போலவே அடங்காக்கோபத்துடனும் ஆற்றாமையுடனும் நான் இதைக் கூறுகிறேன். அங்கு சேமிக்கப்பட்டிருந்த அழிந்தோர், அழிந்த ஆவணங்கள், அனைத்தினதும் நினைவாக அனலில் அழிந்த அந்த  அரும்பொருளகம் அப்படியே விடப்பட்டு நினைவிடமாகப் பேணப்படவேண்டும். என் ஆசை அது ஒன்றே.” என்று சொல்லியிருக்கிறார்.  யாழ் நூலக எரிப்பு என்பது தமிழினத்தின் மாறாவடு. அப்படி ஒரு அசம்பாவிதம் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் யாழ் நூலகத்திற்கு நடந்தது என்பதற்கான சிறு எச்சம் கூட இன்று இங்கு இல்லை. மாபெரும் அறிவழிவுச் சம்பவத்தின் நினைவகமாக  காலம் காலமாக நீடித்திருக்கவேண்டிய அந்த அடையாளம் பூச்சுப்பூசி மறைக்கப்பட்டது. பிரேசிலாவது அந்தத் தவறைச் செய்யாமல், தன் எரிந்தழிந்த அரும்பொருளகத்தை நினைவிடமாகப் பேணவேண்டும்.

 

பேரறிவுச் சேகரமொன்றை பரிதாபமாக இழந்த இனமொன்றின் பிரதிநிதியாக நூலகம் நிறுவனம், பிரேசிலின் இந்தப் பெருந்துயரில் இணைந்து கொள்கிறது. அந்த இழப்பை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறது. கூடவே,  கண்முன் இடம்பெற்ற இந்த இரண்டாவது வரலாற்றுப்பேரிடருக்குப் பின்னராவது தமிழர் ஆவணப்படுத்தலில் மும்முரமாக ஈடுபடவேண்டும்; அதில் முன்னின்று உழைக்கும் நூலகத்துக்கும் கைகொடுக்கவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது.

 

மேலும் அறிய:

“ரைம்” இதழ் செய்தி.

விக்கிப்பீடியா கட்டுரை

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி.