ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்திய ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது. நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளரான ரிஃப்கான் அவர்கள் கலந்துகொண்டதுடன் பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பு, முஸ்லிம் எஃப்பமேரா செயற்றிட்டம் பற்றிய விளக்கமளிப்பு, மாணவர்களுக்கு ஈ-பள்ளிக்கூடம் தொடர்பான விளக்கமளிப்பு, நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் துண்டுப்பிரசுரங்களை ஆவணப்படுத்தலுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வின் ஊடாக ஆர்வமுள்ளவர்களோடு முஸ்லிம் எஃபமேரா பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அவர்களுடைய தொடர்புகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
அதேபோன்று 178 பக்கங்களைக் கொண்ட 105 ஆவணங்கள் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக பார்வையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் நேரடியாக கொண்டு வந்து தர முடியாதவர்களிடம் இருந்து ஆவணங்களை நேரடியாக சென்று பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறாக அவர்களது தொடர்பிலக்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள நபர்களிடம் இருந்து தொடர்பிலக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
மேலும் இந்நிகழ்வில் ஒவ்வொரு நாளும் வருகை தந்த அரங்க அதிதிகளோடு நூலகம் பற்றியும் நூலக செயற்பாடுகள் பற்றியும் noolaham.org, aavanaham.org பற்றியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த ஏறாவூர் வாசிப்பு வட்டம் மற்றும் ஏறாவூர் நகரசபை என்பவற்றுக்கு நூலக நிறுவனம் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இப் 10 நாட்களும் நூலக செயற்பாடுகளை முன்னெடுக்க இடம் தந்து உதவிய “Pages Book House” இற்கும் நூலக நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.