25 மார்ச் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு லண்டனில் இருந்து வயிரவநாதன் சிவரதன், அச்சுதன் சிவகுமார் மற்றும் இ. தமிழரசன், ராஜி தமிழரசன் குடும்பத்தினரும், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ஞானேந்திரராஜா கஜேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இவர்களுள் வயிரவநாதன் சிவரதன் என்பவர் 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் நூலக நிறுவனத்திற்கு நீண்ட காலமாக நிதிப்பங்களிப்புச் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அச்சுதன் சிவகுமார் என்பவர் 2007ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராக ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக நூலகத்தின் எண்ணிம நூலக இணையத்தளச் செயற்பாடுகளிலும் பிரித்தானியாவில் நூலகம்சார் முயற்சிகளை ஆரம்பிப்பதிலும் பங்களித்து இருக்கின்றார்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார்கள். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டனர். மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், நூலகத்திற்குப் புதிதாக வருகை தந்திருந்த இ. தமிழரசன் குடும்பத்தினர் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியைப் பாராட்டியதுடன் தங்களாலான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் எண்ணிமமாக்கமும் எண்ணிமப் பாதுகாப்புச் செயன்முறை பணியாளர்கள், எண்ணிம நூலகப் பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.