யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்களின் உள்ளக பயிற்சிக்கான நூலக அறிமுக நிகழ்வு கடந்த 12.06.2024 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம், வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்கள், நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர், துறை சார் தலைவர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு நூலக நிறுவனம் பற்றிய தெளிவுப்படுத்தல், வரலாற்றுத்துறை தலைவரின் கருத்துரை, நூலக பிரதம நிறைவேற்று அலுவலரின் உரை, உள்ளகப் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டவர்களின் அறிமுகம், நிறுவனத்தின் துறைசார் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் மற்றும் கலந்துரையாடலுடன் இனிதே நிறைவு பெற்றது. மேலும், நிகழ்வின் பின்னர் மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைக்கும் சென்று அங்கு இடம்பெறக்கூடிய செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அது தொடர்பிலான மேலதிக விளக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இவர்கள் அனைவரும் எதிர்வரும் 18.06.2024 செவ்வாய்க்கிழமை முதல் நூலகத்தின் உள்ளகப் பயிற்சியாளர்களாக இணைந்துகொள்ள உள்ளனர்.