ஆகஸ்ட் மாதம் 01, 02, 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் காலை 9.00 மணிமுதல், யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “YGC புத்தாக்கத் திருவிழா 2024” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.
புத்தாக்க, தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை அனைத்தும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமான இந்நிகழ்வில் நூலகத்தின் ஆவணப்படுத்தலில் புத்தாக்க, தொழில்நுட்பங்களின் பயன்பாடு எவ்வாறாக உள்வாங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றி சமூகத்திற்கு கொண்டு சேர்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.
நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில்,
- நூலக நிறுவனம் பற்றிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
- அங்கு வருகை தந்தவர்களுக்கு நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
- நூலகத்தின் ஓலைச்சுவடி செயற்றிட்டம் பற்றிய தெளிவுப்படுத்தல் கொடுக்கப்பட்டது.
- எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பில், நூலக வலைத்தளத்தில் ஆவணப்படுத்த தவறவிடப்பட்டவை பற்றி குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
- சில தன்னார்வலர்களின் மூலமாக ஆவணப்படுத்தலுக்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக, இந்நிகழ்வின் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன் இவர்களுக்கு நூலகத்தின் திறந்த கல்வி வளங்கள் செயற்றிட்டம் பற்றிய தெளிவுப்படுத்தல் கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கூட நூலகம் (www.noolaham.school) வலைத்தளம் காட்சிப்படுத்தப்பட்டு அதிலுள்ள விடயங்களை அணுகுவது பற்றிய விளக்கமும் நூலகப் பணியாளர்களால் தெளிவுப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து வந்த இரு நாட்களிலும் நிறுவனத்தின் செயற்பாடுகள், செயல் திட்டங்கள் சார்ந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள கூடியவகையில் ‘ஈழத்து ஓலைச்சுவடிகள் நூலகம்’ செயல் திட்டம் சார்ந்து, ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயல் முறைகள் காட்சிப்படுத்தப்பட்டது.