நூலக நிறுவனத்தின் பிராந்திய ஆவணமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியான திருகோணமலை பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை பிராந்தியம் சார்ந்து காணப்படக்கூடிய மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றனவற்றை ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்ட இச்செயற்றிட்டத்தை, நிதிப்பற்றாக்குறையால் இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதன் தொடர்ச்சித் தன்மைக்கு ஆதரவளிக்கும் முகமாக கடந்த மாதம் 28 ஜூலை 2024 , ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருக்கோணமலை தளம் அலுவலகத்தில் நேரடியான கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலை பிராந்தியம் சார்ந்த ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இச்செயற்றிட்டத்தினை முந்நகர்த்திச் செல்வதற்கான ஆலோசனைகளை முன்வைத்தனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலகக் கள ஆய்வாளர் கார்த்தி ஹயன் அவர்களால் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை, இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள், தேவைப்பாடுகள் தொடர்பிலான விளக்கக்காட்சி முன்வைக்கப்பட்டதுடன், தொடர்ந்து நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் Ranji Nanthan அவர்களால் திட்டத்தை தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதில் நிதி ரீதியாகக் காணப்படும் சிக்கல் நிலைமைகள் தொடர்பிலான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தவர்களின் கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இச்செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆதரவினைக் கோரும் முகமாக ஒழுங்குப்படுத்தப்பட்ட இக்கலந்துரையாடலில், கலந்து கொண்ட அனைவருக்கும் நூலக நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.