உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து, பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்தும் நோக்கில், “மீண்டும் ஊருக்கு போகலாம்” எனும் தொனிப்பொருளில், நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
கண்காட்சி, புத்தக வெளியீடு, போட்டிகளும் பரிசளிப்பும், பாரம்பரிய விளையாட்டுக்கள், கொண்டாட்டங்கள் என பல்துறை சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இத்திருவிழாவில் கடந்த 7ஆம் திகதி நூலக நிறுவனப் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக இவ்விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் நூலக நிறுவனம் அதனது செயற்பாடுகள் தொடர்பில் நூலகப் பணியாளர்கள் விளக்கம் கொடுத்ததுடன், நூலகம் பற்றிய கையேடும் பகிரப்பட்டது. மேலும், எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்கவும், ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கான ஆதரவு கோரவும் இது வாய்ப்பளித்தது.
நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற “ஈழத்து ஓலைச்சுவடி நூலகம்” செயற்றிட்டம் சார்ந்து ஓலைச்சுவடிகளை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் இவ்விழாவிற்கு வருகை தந்தோரிடம் நூலகப் பணியாளர்களால் விளக்கங்கள் கேட்கப்பட்டது.
அதனடிப்படையில், இவ்விழாவின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட மூலிகைக் கண்காட்சியில் வளவாளராக செயற்பட்ட நெடுத்தீவு வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்தியர் Dr. Deron என்பவர், ஓலைச்சுவடிகளை அடையாளப்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக, மருத்துவம் சார்ந்த சுவடிக்கட்டுக்கள் வைத்திருக்கும் சிலர் குறித்த தகவல் வழங்கியதுடன், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் நூலகத்தால் இதுவரை எண்ணிமப்படுத்தப்படாமல் காணப்படக்கூடிய புதிய ஓலைச்சுவடி கட்டுக்களை அடையாளப்படுத்தித் தருவதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அழிவடையும் நிலையிலுள்ள மருத்துவ வரலாறு சார்ந்த ஆவணங்களை ஆவணப்படுத்துவதை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட, நூலகத்தின் “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” செயற்றிட்டம் சார்ந்து, ஒல்லாந்தர் ஆட்சியில் மருத்துவ தேவைக்காக வடிவமைக்கப்பட்டு பிரித்தானியர் காலத்தில் முக்கிய நிர்வாக மையமாக மாற்றப்பட்டு தற்போது சுற்றுலாத் தளமாக மாறியுள்ள நெடுந்தீவிலுள்ள ஒல்லாந்தர் வைத்தியசாலை பற்றிய ஆவணமாக்கத்துக்கும் இக்களப்பயணம் உதவியமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் நெடுந்தீவு மகா வித்தியாலயம் பார்வையிட கிடைத்ததுடன் நூலக எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறை முகாமையாளரான மியூரி கஜேந்திரன் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்த போது, அப்பாடசாலையில் காணப்படக்கூடிய கல்விசார் ஆவணங்களை நூலகத்தின் பள்ளிக்கூட நூலகம் (www.noolaham.school) வலைத்தளத்தில் பதிவேற்றத் தந்துதவுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறாக நூலகம் மற்றும் அதனது செயற்பாடுகள் சார்ந்து சமூகத்திற்கு தெரியப்படுத்தவும், நூலகத்திற்கான ஆவணப்படுத்தல் சார்ந்த பங்களிப்பை சமூகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவும் இப்பயணம் வாய்ப்பாக அமைந்திருந்தது.