நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது.
சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளரான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக செயற்பட்டு புகைப்படம் ஆவணமாக்கல் சம்பந்தமான பல கருத்துக்களை வழங்கியிருந்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணினித்துறை நிபுணர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளடங்களாக யாழ்ப்பாணம், கைதடி, கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, கல்வியங்காடு, நல்லூர், கொழும்புத்துறை, மன்னார், கொடிகாமம், கொக்குவில் முதலான இடங்களில் இருந்து 32 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.
இலங்கையின் தமிழ் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி நூலக நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நூலகத்தின் ஆவணக வலைத்தளத்தில் இதுவரை 5800+ இற்கும் மேற்பட்ட படங்கள் சேகரங்கள் இற்றைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஒளிப்படம், தபாலட்டை, ஓவியம், நிலப்படம் என பல்வேறு விதமான படங்கள் உள்வாங்கப்படுகின்றன. இவ்வாறான புகைப்படங்களை எவ்வாறு ஆவணப்படுத்தலாம்?, புகைப்படம் ஒன்றை எவ்வாறு எடுப்பது, புகைப்படக் கருவியின் தொழிபாடுகள் செய்வது எப்படி போன்ற விடயங்கள் தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஊட்டுவதாகவும் பயிற்சிகளை வழங்குவதுமாகவே இப்பட்டறை அமைந்திருந்தது.
இப்பட்டறையின் ஆரம்பத்தில் நூலக ஆளுகைச் சபை உறுப்பினர் சுஜீவன் தர்மரத்தினம் அவர்கள் நூலகம் தொடர்பிலான அறிமுகத்தினையும், நூலகப் பணியாளர் புகழினி ஆவணகத்தின் படங்கள் சேகரம் தொடர்பிலான அறிமுகத்தினையும் வழங்கினார். பின்னர் வளவாளர் புகைப்பட ஆவணமாக்கல், புகைப்படக் கருவி கையாளல், கருவி தொழிற்பாடுகள் செய்தல், ஒரு இடத்தை, நபரை, நிகழ்வொன்றினை புகைப்படம் எடுத்தல், புகைப்படத்தின் தரம் குறையாமல் எடுப்பது எப்படி, கைப்பேசியை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது எப்படி? புகைப்படமாக்கலில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களின் பங்களிப்பு, அழகியல் சார்ந்து புகைப்படம் எடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் கொடுத்தார். மேலும் இடையிடையே பங்கு பெற்றவர்களின் புகைப்படம் சார் ஆவணமாக்கல் தொடர்பிலான கேள்விகளுக்கு உரிய பதிலை தெளிவான முறையில் வழங்கி பட்டறையை சிறப்பான முறையில் கொண்டு சென்றார்.
நிகழ்வின் இறுதியில் நூலகத்துக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வளவாளருக்கான நினைவுப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.