கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகமும் மட்டக்களப்பு மாநகர பொது நூலகமும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 28,29,30 ஆந் திகதிகளில் முற்பகல் 09:15 மணி தொடக்கம் மாலை 07:15 மணி வரைக்கும் மட்டுநகர் காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவிக்கரையினை அண்டியுள்ள பொது நூலக வளாகத்தில் நடத்திய மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.
சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள், பிரசுரங்கள் முதலியவை பிரதானமாகக் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மூன்று தினங்களும் உரையரங்குகள், நூல் வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் நடைபெற்றன.
நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டதுடன் இப்புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு, நூலக வெளியீடுகளான “தேன்மொழி இதழ்”, “ஆவண மாநாட்டு இதழ்” மற்றும் சுவடிகளின் காட்சிப்படுத்தல்கள் மற்றும் அவற்றை எண்ணிமப்படுத்துவது தொடர்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது.