உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத முதலாவது வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 02ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
எண்ணிம பாதுகாப்பு என்பது தொடர்பில் சிந்திக்க நம்மில் பெரும்பாலோர் நேரம் செலவிடுவதில்லை, ஆனால் தனிநபர்களாகவும், சமூகமாகவும் இன்று உருவாக்கும் எண்ணிம உள்ளடக்கம் எதிர்காலத்தில் இன்னும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுவது கட்டாயமானதாகும்.
இவ்வாண்டு ‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இத்தினமானது எண்னிமப் பாதுகாப்பில் ஈடுபடும் சமூகத்தை ஒருங்கிணைப்பதுடன் எண்ணிம தகவல் மற்றும் உட்கட்டமைப்பு என்பவற்றை ஆதரவளிப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதேபோன்று எண்ணிம பாதுகாப்பு ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை கொண்டாடவும் ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைகின்றது.
எண்ணிமப்படுத்தி பாதுகாக்கப்படுபவை,
- கல்விசார் நடவடிக்கைகள்
- கலை மற்றும் படைப்பாற்றல் தொழில்கள்
- ஆய்வு சார் நடவடிக்கைகள்
- அரசுசார் நடவடிக்கைகள்
- கலாச்சார அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமையினை மேம்படுத்தல்
- பத்திரிகை மற்றும் செய்தி அறிக்கையிடல்
- கலாசார சுற்றுலா விருத்தி
- கலைப்பொருட்கள், கலைப்படைப்புகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், செய்தித்தாள்கள், எபிமேரா, காப்பக பதிவுகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் பிற கலாச்சார பாரம்பரியத்தை பேணல்
- திறந்த கலாச்சாரத்தை மேம்படுத்துதல்
என பலவாறான நோக்கங்களுக்கு அத்தியாவசியமானவையாக திகழ்கின்றன.
அதனடிப்படையில் நூலக நிறுவனமும் இவ் எண்ணிம பாதுகாப்பில் பாரிய பங்களிப்பை செய்து வருகிறது. இன்றுவரையில் அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள் மற்றும் சுவடிகள் என 5,236,788 பக்கங்களைக் கொண்ட 143,969 ஆவணங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது.
உலக எண்ணிம பாதுகாப்பு தினம், நாம் இதுவரை சாதித்துள்ளதைத் திரும்பிப் பார்க்கவும், நமது எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றி சிந்திக்கவும் வாய்ப்பளிக்கிறது. இதேபோன்ற சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்ளும் ஒரு சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம் என்பதையும், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது அவற்றைக் கடக்க முக்கியமானது என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.