18 ஏப்ரல் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புவியியற்றுறையின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான திட்டமிடலாளர் செல்வராஜா ரவீந்திரன் மற்றும் இராசலிங்கம் மங்களேஸ்வரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், செல்வராஜா ரவீந்திரன் நூலகத்தின் அரிதான ஆவணங்கள் மற்றும் எண்ணிமப்படுத்தும் முறைகள் எண்ணிம சாதனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, தனது கலாநிதி கற்கைக்காக இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாண நகரத்திற்கான நிலையான நகர்ப்புற வடிவத்திற்கான திட்டமிடல் கட்டமைப்பை உருவாக்குதல் பற்றி ஆராய்வதாக குறிப்பிட்டதுடன், இது தொடர்பான ஆழமான அறிவை பெற்றுக்கொள்வதற்கான தனது கள ஆய்வில் ஒரு பகுதியாகவும் நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதற்காகவும் வருகை தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இராசலிங்கம் மங்களேஸ்வரன் தனது வெளியீடுகளுள் ஒன்றான “கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தமும் முகாமைத்துவமும்” என்ற நூலினை நூலகத்தின் எண்ணிமமாக்கல் செயற்பாட்டிற்காக வலைத்தளத்தில் இற்றைப்படுத்துவதற்கான தனது எழுத்து மூல அனுமதியுடன் வழங்கியிருந்தார்.
இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர், எண்ணிமமாக்கமும் எண்ணிமப் பாதுகாப்புச் செயன்முறை பணியாளர்கள், எண்ணிம நூலக சேவைகள் துறை பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.