22 ஏப்ரல் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை நாகேந்திரன் வருகை தந்திருந்தார்.
இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார்.
மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், “நூலகத்தின் வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணகமாக்கம்” செயற்றிட்டம் தொடர்பில் மறைந்த வைத்தியர் என்டன் கில்பர்ட் செபஸ்டியன்பிள்ளை அவர்களது ஆவணங்களை ஆவணப்படுத்துவது தொடர்பில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தித் தருவதாக கூறினார்.
ஓலைச்சுவடிகளை எண்ணிமமாக்கும் செயற்பாடுகளை அவதானித்ததுடன் “ஈழத்து ஓலைச்சுவடிகள் நூலகம்” செயற்றிட்டத்திற்கான ஓலைச்சுவடிகளைப் பெற்றுத் தருவதில் தன்னாலான உதவிகளை செய்வதாயும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் நூலகத்தின் எண்ணிமமாக்கல் செயற்பாடுகளுக்கு தேவையான பெரும்பாலான ஆவணங்கள் கெளரி பொன்னையா அவர்களிடம் இருப்பதாகவும், அவர் அதனை அன்பளிப்பு செய்யவுள்ள நிலையில் அதனையும் நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்காக பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
முக்கியமாக தனது தந்தை சங்கரப்பிள்ளை, பொ. இனுடைய ஒருசில ஆவணங்கள் நூலக வலைத்தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து கொண்டதுடன், அவரை நூலகத்தில் ஆளுமையாக உள்வாங்குவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து, அது சார்ந்து தான் தகவல் தருவதாக குறிப்பிட்டார்.
நூலகத்தின் விளம்பரப்படுத்தலுக்காக அவுஸ்திரேலியாவில் இயங்கி வருகின்ற தமிழ் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் தொடர்பில் அறியத்தந்திருந்தார்.
நூலக செயற்பாடுகளின் நிலைத்திருப்பு மற்றும் பணியாளர்களின் விஸ்தரிப்பு ஆகியவற்றினை மையப்படுத்தி செயற்றிட்டம் சார்ந்த அறிக்கையினை உருவாக்குவதுடன், என்ன செய்ய போகின்றோம், எவ்வாறு செய்ய போகின்றோம், செய்வதால் யாருக்கு என்ன பயன், செய்வதற்கான மொத்த செலவு ஆகியவற்றை உள்ளடக்கியவகையில் உருவாக்கும் போது, அது சார்ந்த சாதகமான எதிர்பார்ப்பினை அடையலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இறுதியாக நூலகம் தொடர்பிலான காணொளி ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர், எண்ணிமமாக்கமும் எண்ணிமப் பாதுகாப்புச் செயன்முறை பணியாளர்கள், எண்ணிம நூலக சேவைகள் துறை பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.