ஆவணப்படுத்தலில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ள நூலக நிறுவனத்தின் காட்சியறை, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நூலக நிறுவனம் பற்றித் தெரிந்த பலரும் வருகை தந்திருந்ததுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் சார்ந்து மேலதிக விடயங்களையும் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக பலரும் தங்களது பின்னூட்டல்களை வழங்கியிருந்த நிலையில், வலைத்தளத்தில் சேர்க்கும் படி சில விடயங்களையும் பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக, பள்ளிக்கூட நூலகம் தளம் கல்வி செயற்பாடுகளுக்கு அதிகம் உதவுவதாகவும், நிறைய தகவல்களை சேர்க்கும்படியும் பரிந்துரை செய்தனர்.
மேலும், ஒரு சிலர் நிறுவனத்தின் தன்னார்வலராக இணைந்து செயற்பட ஆர்வமுள்ளதாகவும் நிறுவனத்திற்கு தங்களாலான தன்னார்வப் பணியை செய்வதாகவும் கூறியிருந்தனர்.
குறிப்பாக,
1. இலங்கை சார்ந்து காணப்படக்கூடிய அரிய ஆவணங்களை தருவதாகவும்,
2. யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் ஆச்சிரமம் ஒன்றில் சோதிடம் சார் ஆவணங்கள் இருப்பதாகவும், அதனை ஆவணப்படுத்தும் படியும்
3. நூலகத்தின் “ஈழத்து ஓலைச்சுவடி நூலகம்” செயற்றிட்டத்திற்கு சுவடிகளை வாசித்து தர உதவுவதாகவும்
4. ஓலைச்சுவடிகள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்த உதவுவதாகவும்
5. வாய்மொழி வரலாறு சார்ந்து பங்களிப்பு செய்வதாகவும்
6. ஆவணங்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் ஈடுவதற்கான அனுமதி எடுத்து தருவதாகவும் வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் ஆவணப்படுத்தல் பணிக்கு ஆதரவளிக்கும் வகையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எழுத்தாளர்கள், ஆவணப் பங்களிப்பாளர்கள், நிதிப்பங்களிப்பாளர்கள் என, நூலகத்துடன் தொடர்புடைய பலரும் நூலக காட்சியறைக்கு பிரவேசித்திருந்ததுடன், நூலக வலைத்தளத்தில் பதிப்புரிமை அனுமதி இல்லாமல் காணப்படக்கூடிய,
1. கண்ணதாசன், செல்வம்
2. சத்தியேந்திரன், ஜெ.
3. புவஸ்ரினா,மெய்யழகன்
4. ஒலீதின் மொகமட் மஃபாஸ்
5. மயூரகிரி, தி
6. பாரதி இராஜநாயகம்
7. அல்வின் எட்வின் பீரிஸ்
8. திருச்செல்வம் தவரத்தினம்
ஆகியோரின் பகுப்பிலுள்ள ஆவணங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ளவும் இப்புத்தகத் திருவிழா வாய்ப்பாக அமைந்திருந்தது.