21 ஆகஸ்ட் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை மனோகரன் வருகை தந்திருந்தார்.
நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் சார்ந்து ஏற்கனவே நன்கறிந்த இவர், பல ஆவணங்களை நூலகத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கியிருக்கிறார். குறிப்பாக, கடந்த 11.01.2024 அன்று நூலக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த போது, இவரது தந்தை பொ. சங்கரப்பிள்ளை அவர்களது மெய்யியல், வரலாறு சார்ந்த “After Death”, “We Tamils”, “நாம் தமிழர்” ஆகிய நூல்களையும், 2016ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாறு தொடர்பில் தான் எழுதி வெளியிட்ட “Amma the Journey” நூலையும் உரிய எழுத்துமூல அனுமதியுடன் நூலகத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய தினம் பொ. சங்கரப்பிள்ளை மற்றும் அவரது குடும்பம் சார்ந்த நூல்கள், நினைவுமலர்கள் உட்பட 12 ஆவணங்களையும், 46 இற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், புகைப்படங்கள் போன்ற குறுங்கால ஆவணங்களையும் ஆவணப்படுத்தும் படி நூலகத்தின் எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறை முகாமையாளர் புகழினி பிரியலக்சன் அவர்களிடம் உரிய அனுமதியுடன் அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.
அத்துடன் இதுவரை பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதியின்றி நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த ஒரு சில ஆவணங்களுக்கான அனுமதியினை நேரடியாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆவணப்படுத்தலுக்கான ஆவணங்களை வழங்கியது மாத்திரமின்றி, நூலகத்தின் ஏனைய செயற்றிட்டங்கள் பற்றியும் கேட்டறிந்து கொண்டதுடன், செயற்றிட்டங்கள் சார்ந்து பங்களிப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பில் ஒரு சில செயற்றிட்டங்களுக்கான செயற்றிட்ட முன்மொழிவுகளை தனக்கு அனுப்பி வைக்கும் படியும் அவற்றினது முன்னெடுப்பில் தன்னாலான ஆதரவை வழங்குவதாயும் தெரிவித்திருந்தார்.
இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.