யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்களின் உள்ளக பயிற்சி நிறைவின் இறுதி நாள் நிகழ்வு கடந்த 12.08.2024 திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம் , வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்கள், நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர், துறை சார் தலைவர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, உள்ளகப் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டவர்களின் பயிற்சி பற்றிய பின்னூட்டல்களுடன் ஆரம்பமானது.
பின்னர் வரலாற்றுத்துறை தலைவரின் கருத்துரை, நூலக பிரதம நிறைவேற்று அலுவலரின் கருத்துரை, மற்றும் உள்ளகப் பயிற்சியாளர்களின் இரண்டு மாத பயிற்சிக்காலத்தின் அடைவுகள், அவர்களது ஈடுபாடு என்பன தொடர்பில் அவர்களுக்கு பயிற்சி வழங்கிய நிறுவன துறைசார் தலைவர்களின் கருத்துரைகள் என்றவாறாக இடம்பெற்றன.
குறிப்பாக நூலக நிறுவனத்தினது ஆவணப்படுத்தல் செயற்பாடுகளானது பெரும்பாலும் வரலாறு சார்ந்து தொடர்புபடுவதாயும், வரலாற்று துறை மாணவர்கள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு உதவியளிக்கும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், நூலகப் பணியாளர்களால் தாங்கள் சிறந்த முறையில் வழிநடாத்தப்பட்டதாயும், பல்வேறு துறைசார் வேலைகளை குறுகிய காலப்பகுதியில் கற்றுக்கொள்ள முடிந்ததாயும், உள்ளகப் பயிற்சியின் ஆரம்பத்தில் காணப்பட்ட தயக்கம், பதற்றம் என்பன இன்றி சுதந்திரமாக பயிற்சியில் ஈடுபட நூலகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததாயும் மாணவர்கள் சிலர் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சியளித்தது.
அதனைத் தொடர்ந்து உள்ளகப் பயிற்சியாளர்களால், நூலக நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், நூலகத்தினால், உள்ளகப் பயிற்சியாளர்களை நூலக அலுவலகத்திற்கு பயிற்சிக்காக அனுப்பியமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம் அவர்களுக்கு சிறிய நினைவுச் சின்னமும், உள்ளகப் பயிற்சியாளர்களாக இணைந்துக் கொண்டவர்களுக்கு நினைவும் பரிசும் அதனோடு சேர்ந்து இரண்டு மாத பயிற்சிக்கான பாராட்டுச் சான்றிதழும் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலரால் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.