06 செப்டம்பர் 2024, வெள்ளிக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து BHEEM MOVIES இனது Filmmaker, Photographer உம் இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கின்ற தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவரான ஆர்.ஆர். சீனிவாசன் இராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகின்ற குட்டி ரேவதி என அழைக்கப்படும் ரேவதி சுயம்புலிங்கம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏலவே நன்கறிந்த இவர்கள், நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சிப்போக்கினை பற்றி கேட்டறிந்து கொண்டதுடன், ஒவ்வொரு துறை சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டனர். குறிப்பாக, இதுவரை 5.7 மில்லியன் பக்கங்களை நூலகம் ஆவணப்படுத்தியுள்ள விதம் தொடர்பிலும், அதில் ஒவ்வொரு துறைசார் பணியாளர்களின் ஈடுபாடு என்பன தொடர்பிலும் ஆர்வத்துடன் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.
அதுமட்டுமன்றி,
* “வாசிகசாலை”,
* “முன்னோர் ஆவணகம்”,
* “ஈழத்து ஓலைச்சுவடிகள் நூலகம்”,
* “வட இலங்கையின் மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்”
எனப் பல செயற்றிட்டங்கள் ஊடான ஆவணப்படுத்தல் செயற்பாடுகள், ஆவணச் சேகரிப்பில் கள ஆய்வாளர்களின் பங்களிப்பு என்பன பற்றியும் இவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.
இவர்கள், நூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஒவ்வொரு செயற்றிட்டங்கள் மற்றும் துறைசார்ந்து முழுமையான காணொளிப்பதிவினை பெற்றுக்கொண்டதுடன் அதனை ஆவணப்படமாக்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களுடனான சந்திப்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.