இந்தியாவின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர் திரு. சுந்தர் கணேசன் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

11 செப்டம்பர் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர், திரு. சுந்தர் கணேசன், உதவி பணிப்பாளர்களான, எஸ்.முத்து மாலதி, எம்.மணிகண்ட சுப்பு ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

2 (1) 6 (1)

நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏலவே நன்கறிந்த இவர்கள், நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை ஆர்வமுடன் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அதுமாத்திரமின்றி, எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறை துறை யினரால் எண்ணிமமாக்கல் முறைகள், எண்ணிமமாக்கல் கருவிகள் குறித்தும், எண்ணிம நூலக மற்றும் ஆவணக துறை யினரால் நூலக வலைத்தள பதிவேற்றம் சார்ந்த செயற்பாடுகள், பதிப்புரிமையாளர் அனுமதி, உசாத்துணை சேவை, பயனர் சேவைகள் குறித்தும் தெளிவுப்படுத்தப்பட்டது.

5 (1) 4 (1)

7 8 (1)

3 (2)இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டு, 2023ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (The Roja Muthiah Research Library) இனால் வெளியிடப்பட்ட “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை (Oru Panpattin payanam)” என்ற நூலை இவர்கள் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

 

 

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமானது ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் நூலக நிறுவனத்திற்கு ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதுடன், “ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம்” செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், “இந்தியாவில் அச்சிடப்பட்ட ஈழத்தமிழ் பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை ஆவணப்படுத்தல்” எனும் நூலகத்தின் மற்றுமொரு செயற்றிட்டத்தினால் இந்தியாவில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவணங்களை எண்ணிமப்படுத்தி தருவதாக கூறியிருந்தமை மகிழ்ச்சியளித்தது.

இறுதியாக, நிறுவனத்தின் எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறை துறை முகாமையாளர் மியூரி மற்றும் எண்ணிம நூலக மற்றும் ஆவணக துறை முகாமையாளர் புகழினி ஆகியோரால் தங்களது துறைசார்ந்து எண்ணிமப்படுத்தலிலும் ஆவணப்படுத்தலிலும் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்ப முறைகள் குறித்து சில சந்தேகங்களையும் இவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர்.

9 (1) 10 (3)

இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரும் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியுமான இ. மயூரநாதன் , நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.

1 (2) 11 (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *